வேட்டைக்காரன்

Terminator III

Dindugal Sarathy

ஸ்பைடர் மேன்

வான்புலிகள் வந்தனர், தாக்கினர், சென்றனர்

Sunday, November 2, 2008

கடந்த வாரம் வடக்கில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் இரண்டு முகாம்களுக்கு இடையில் பரிமாறிக்கொள்ளப்பட்ட தகவலை இலங்கையின் புலனாய்வுத்துறை ஒட்டுக்கேட்டதன்படி, அவர்கள் தமிழில் "கறுப்பு பறவை"மற்றும் "கறுப்பு வானம்" என் இரண்டு வார்த்தைகளை பயன்படுத்தியதாக பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் இன்றைய தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வார்த்தைகளை கொண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் எங்காவது எறிகனை தாக்குதல்களை நடத்தப்போகிறார்கள் என்ற அடிப்படையில் வடக்கில் உள்ள படையினர் உசார்படுத்தப்பட்டனர். எனினும் அதற்கு மாறாக தமிழீழ விடுதலைப்புலிகள் மன்னாரிலும் கொழும்பிலும் வான் தாக்குதலை நடத்தியதாக இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார்.கடந்த செவ்வாய்கிழமை இரவு 10 மணியளவில், கிளிநொச்சியின் அக்கராயனில் நிலைக்கொண்டுள்ள படையினர், முறிகண்டி,துணுக்காய்,பெரியமடு பகுதிகளின் ஊடான வான்பரப்பில் இரண்டு விமானங்கள் பறப்பதை கண்டுள்ளனர். இந்தநிலையில் இரவு 10.23 அளவில் இந்த வானூர்திகள் மன்னார் தள்ளாடி முகாமின் மீது தாக்குதலை நடத்தியுள்ளன. இதன் மூன்று புதிய ரக குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

இதுவரையிலும் விமானத்தாக்குதல்களுக்காக தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய குண்டுகளை காட்டிலும் இது வித்தியாசமானவையாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக்குண்டுகளில் சி போ வெடிமருந்துகள், சிறிய ரேசர் குண்டுகள் என்பன இருந்துள்ளன. மன்னார் தள்ளாடியில் தாக்குதல் நடத்திய பின்னர் மீண்டும் விடத்தல்தீவின் ஊடாக முல்லைத்தீவு பக்கமாக சென்ற ஒரு விமானம் மீண்டும் சுமார் 45 நிமிடங்களில், தமது நிலைகளுக்கு மேலாக பறந்து சென்றதாக அக்கராயனில் உள்ள படையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் தள்ளாடியில் தாக்குதல் நடத்திய மற்றும் ஒரு விமானம் தொடர்ந்தும் தமது பயணத்தை மேற்கொண்டு மதவாச்சி தலைமன்னார் பாதைக்கு குறுக்காக பறந்து சென்றதை வவுனியா இராணுவ தலைமையகத்தில் உள்ள டு டி ரேடார்கள் அவதானித்துள்ளன. ( இந்த ரேடார்கள்,கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி வன்னியில் தலைமையகம் தாக்கப்பட்டபோது, சேதமடைந்த ரேடார்களுக்கு பதிலாக பொருத்தப்பட்ட ரேடார்களாகும்)

தமிழீழ விடுதலைப்புலிகளிடம் உள்ள செலின் இசெட்- 143 விமானங்கள், 2005 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு கிடைத்துள்ளன. இவற்றின் பறப்பளவு 630 நோட்டிக்கல் மைல்கள் அதாவது ஆயிரத்து நூற்று எழுபது கிலோமீற்றர்களாகும். இதன் ஒன்றின் பெறுமதி 259, ஆயிரத்து350 டொலர்களாகும்.

இந்த விமானத்தில் 240 கிலோ நிறையை கொண்டு செல்ல முடியும். இந்த விமானத்தில் ஒரு விமானி பயணிப்பரென்றால் அது "பறக்கும் குண்டு" என அழைக்கப்படுவதாக இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் கடந்த செவ்வாய்கிழமை இரவு 11.30 அளவில் மீரிகமையில் உள்ள சீன தயாரிப்பான 3 டி ரேடார்கட்டு நாயக்கவில் உள்ள 2 டி ரேடார் என்பன இந்த விமானப்பறப்பை தமது திரைகளில் காட்டியுள்ளன.2 டி ரேடார்கள் விமானங்களின் பறப்பு திசையை காட்டும் அதேநேரம்3 டி ரேடார்கள் விமானப்பறப்பு உயரத்தை காட்டும் வல்லமையை கொண்டுள்ளன.

இந்தவிமானம் கொழும்பை நோக்கி வருவதாக தகவல் கிடைத்தமையை அடுத்து கட்டுநாயக்க விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. கட்டுநாயக்கவிற்கு வரும் விமானங்கள் இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்பட்டன. இராணுவகடற்படை தலைமையகங்கள் உட்பட்ட கொழும்பின் அனைத்து பகுதிகளிலும் மின்சார தடை ஏற்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானம் களனி ஆற்றின் கிழக்கு கரையோரமாக பறந்து வந்து கண்டி பாதையையும் களனியையும் இணைக்கும் களனி பாலத்தின் மேலான வான்பரப்பை கடந்து களனிதிஸ்ஸ மின்சார நிலைய பகுதிக்கு வந்துள்ளது. இதன் பின்னர் இரவு 11.46 அளவில் அது களனிதிஸ்ஸவின் மீது குண்டுகளை வீசியுள்ளது. இந்த தாக்குதலை பார்க்கும் போது மிகவும் அவதானமாக திட்டமிட்டு நிலத்திலுள்ள விமான எதிர்ப்பு ஏவுகனைகளை தவிர்த்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் இந்த குண்டுத்தாக்குதல் இடம்பெறுவதற்கு சுமார் 10 நிமிடங்களுக்கு முன்னர் மீரிகமையில் உள்ள 3 டி ரேடாரும் கட்டுநாயக்கவில் உள்ள 2 டி ரேடாரும் தமது திரைகளில் விமானப்பறப்பை காட்டவில்லை. இதற்கு காரணம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதல் விமானம் குண்டு தாக்குதலுக்காக தாழ்ந்து பறந்தமையாகும். களனிதிஸ்ஸ மீதான தாக்குதலின் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானங்கள் வந்த பாதையிலேயே திரும்பிச்சென்றுள்ளது.

அதேநேரம் இரண்டாவது விமானமும் முல்லைத்தீவுக்கு சென்றடைந்துள்ளது. எனினும் இந்த கால எல்லைக்குள் வான்படையினர் எப் 7 தாக்குதல் விமானத்தின் மூலம் சுமார் 7 தடவைகள் வரை பதில் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த பதில் தாக்குதல் அடுத்த நாள் புதன்கிழமை அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வான்படையினரின் தாக்குதலை எவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானங்கள் தவிர்த்தன என்பதற்கு படைத்தரப்பில் பல கருத்துகள் சொல்லப்படுகின்றன. தமிழீழ விடுதலைப்புலிகள் தமது விமானங்களில் வெப்பத்தை தவிர்க்கக்கூடிய அமைப்புகளை ஏற்படுத்தியிருந்தனர் என்றும் அவர்களின் விமானங்களில் இந்த பதில் தாக்குதல்களை தவிர்க்கக்கூடிய உபகரணங்களை பொருத்தியிருந்தனர் என்றும் படைத்தரப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து அடுத்த நாள் புதன்கிழமையன்று பாதுகாப்பு சபை கூட்டம் கொழும்பில் இடம்பெற்ற போது தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானங்களின் கொழும்பு பிரவேசத்தை கொழும்பு துறைமுகத்தில் உள்ள கெமராக்கள் எடுத்த வீடியோ படத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பார்த்துள்ளார்.

இதேவேளை சம்பவத்தை பார்க்கும் இடத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் விமானம் தமது இலக்கை தாக்கிய பின்னர் 45 நிமிடங்களில் தமது தளம் திரும்பியுள்ளது. இரண்டாவது விமானம் ஒரு மணித்தியாலங்கள் 46 நிமிடங்களில் கொழும்புக்குள் பிரவேசித்து அதே அளவு நேரத்தில் தமது தளத்திற்கு திரும்பியுள்ளதை அவதானிக்க முடியவதாக இக்பால் அத்தாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையிலேயே அடுத்த நாள் வியாழக்கிழமை வன்னியில் வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வான் தாக்குதல்களை நடத்தி விட்டு திரும்பிய போராளிகளுக்கு "நீல புலிகள்" விருது வழங்கி கௌரவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பில் உள்ள அரசியல் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் புதிய அணி ஒன்றை உருவாக்கியுள்ளதாக அண்மையில் வெள்ளவத்தையில் கைதுசெய்யப்பட்ட இளைஞர் ஒருவரிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். தமது அடையாள அட்டை தொலைந்து விட்டதாக முறைப்பாடு செய்யசென்ற இளைஞர் ஒருவரை விசாரணை செய்தபோதே இந்த தகவல் வெளியாகியுள்ளதாக இக்பால் அத்தாஸ் தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் மட்டக்களப்பு கறுப்புப்பாலம் பகுதியில் நான்கு உறுப்பினர்களை கொன்று விட்டு தப்பிச்சென்றதாக கூறப்படும் ஐந்து தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களும் இந்த புதிய பிரிவை சேர்ந்தவர்கள் என்பதே இக்பால் அத்தாஸின் கருத்தாகும். இந்தநிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் இவ்வாறான தாக்குதல்கள் தொடரும் என்றும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.

இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகள் இதுவரை நடத்திய 8 விமானத்தாக்குதல்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது

2007 ஆம் ஆண்டு மார்ச். அதிகாலை 12.45 அளவில் கட்டுநாயக்கவில் உள்ள விமானத்தளம் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் மூன்று வான்படை வீரர்கள் கொல்லப்பட்டதுடன் 16 பேர் காயமடைந்தனர்

2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி அதிகாலை 1.30க்கு பலாலி படைத்லைமையகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது இதில் 6 படைவீரர்கள் கொல்லப்பட்டதுடன் 13 பேர் காயமடைந்தனர்

2007 ஏப்ரல் 26 ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை

2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி அதிகாலை 1.45 அளவில் கொலன்னாவ மற்றும் முத்துராஜவல எரிபொருள் தாங்கிகள் தாக்கப்பட்டன. இதில் அவை சேதமடைந்தன.

2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் 22 அதிகாலை 3 மணியளவில் அநுரதப்புர வான்படைத்தளம் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் கே 8 ரக பயிற்சி விமானம் ஒன்று மில் மி 17 ரக ஹெலிகொப்டர்கள் இரண்டு 206 பெல் ஜெட் ரேஞ்சர் ஒன்று பீச்கிராப்ட் ஒன்று எம் ஐ 24 ஹெலிகொப்டர் ஒன்று ஆகியன அழிக்கப்பட்டன. சீன தயாரிப்பான பிடி 8 ரக பயிற்சி விமானங்கள் இரண்டு ஆளில்லா புலு ஹொரிசன் விமானங்கள் இரண்டு என்பன சேதமடைந்தன. எனினும் அவையும் பின்னர் வான்படையினரின் பாவனைக்கு எடுக்கப்படவில்லை. அத்துடன் இந்த சம்பவத்தில் 13 வான்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். ஹெலிகொப்டர் விபத்தில் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டனர்.

2008 ஆகஸ்ட் 26 ஆம் திகதி இரவு 11 மணிக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் வான்படையினர் திருகோணமலையில் உள்ள கடற்படைத்தளத்தை தாக்கினர். இதில் நான்கு படையினர் பலியாகினர்.

2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் திகதி வன்னிக்கான பாதுகாப்பு படையினரின் வவுனியா பிரதான முகாம் தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானத்தாக்குதலுக்கு உள்ளானது. இதில் 11 படையினர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர்.

2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் திகதி இரவு 10.23க்கு தள்ளாடி இராணுவ முகாம் வான்புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானது. அதேதினம் இரவு 11.46 அளவில் களனிதிஸ்ஸ மின்சார உற்பத்திமையம் வான்புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானது

1 comments:

Anonymous said...

தூரகத்தில் இருந்த இந்திய படையினர் விமாணங்கல் மீது தாக்குதல் நடத்தி இருப்பது யோசிக்க வேண்டிய விடயம், ஒப்பினாக டிக்கிளர் பண்னி அடிபடலாம் இந்தியா.

November 3, 2008 2:31 AM

Post a Comment